Welcome to Your Vasanth.info News :. வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரனின் மன நிலையே நமக்கு இப்போது தேவை - சுவாமி விவேகானந்தர்
 
 
 LATEST NEWS
சக மானிடருக்கு ஏதேனும் நன்மை செய்யமுடியுமானால் அல்லது அன்பு காட்ட முடியுமானால் அதனை இப்போதே செய்திடுவோம். தள்ளிப்போடவோ மறுக்கவோ வேண்டாம். ஏனெனில் இந்த உலகில் நாம் இனியொரு முறை பயணிக்கப்போவதில்லை

                      I expect
to pass through this world but once. Any Good therefore that I can do, or any kindness that I can show to any fellow creature let me do it now.  Let me not defer or neglect it,  for I shall not pass this way again  -
Stephen Grellet


 
 
 

அறிமுகம்

உரிய நியாயமான நிவாரணத்தை உடனடியாக வழங்குவது நிர்வாகத்தின் கடமை. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் விண்ணப்பித்தும் உரிய நியாயமான நிவாரணம் கிடைக்காமல் பலர் தவிக்கிறார்கள்.

பல வருடங்களாக பொது வழியை ஆக்ரமித்து பொது மக்களுக்கு மிகுந்த இடைஞ்சலை கொடுத்து வந்த அரசியல் மற்றும் மிகுந்த பண பலம் பெற்று விளங்கிய அந்த  மனிதர்களைப் பற்றி திரு.அலாவுதீன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற போது தெரிய வந்த உடனேயே தனது அதிரடி நடவடிக்கையை உடனடியாக துவக்கினார். அடுத்த 1 நேரத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட கோப்புகளுடன் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஆஜராக உத்தரவு பறந்தது. 24 மணி நேரத்தில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது. அரசியல் பின்னணியை பார்த்து அவர் பின் வாங்கவில்லை.பயப்படவில்லை. பணத்திற்காக சபலப்படவில்லை.

கல்வித் துறையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு பல வருடங்களாக ஓய்வூதிய பிரச்சனை.  அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து சலித்துப்போன நிலையில் திரு.அலாவுதீன் அவர்கள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றவுடனேயே அவரை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். சம்மந்தப்ட்ட அதிகாரிகளை கோப்புகளுடன் வரவழைத்தார். 24 மணி நேரத்தில் பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பல பிரச்சனைகளை திரு.அலாவுதீன் மிக குறுகிய காலத்தில் தீர்த்து வைத்திருக்கிறார்.

இவரைப் போன்று பாதிக்கப்படோருக்கு நியாயத்தை உடனடியாக வழங்க முனைப்புடன் செயல்படும் அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் இருந்துவிட்டால்........

ஆனால் –

நியாயமான கோரிக்கைக்காக வருடக் கணக்கில் போராட வேண்டியிருப்பதும் அதிகாரிகளின் அதிகார வரம்புக்குட்பட்டு மிக சாதாரணமான தீர்வுக்கு வாய்ப்புள்ளவைகளுக்கு கூட நீதிமன்றம் சென்றுதான் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதும் மிகவும் துரதிஷ்டவசமானது.

சிட்டிசன், ரமணா போன்ற திரைப்படங்களில் பிரதிபலித்த அதிகாரிகளைப் போன்றவர்களாலும், நேர்மையான அதிகாரியாக பிரகடனப்படுத்திக்கொள்ளாத குறையாக சத்தியம் தவறாத உத்தம கோபாலர்களாக காட்டிக்கொண்டு ஆனால் உண்மை நிலையறிந்து செயல்படாமல் வாய்சொல்லில் வீரர்களாக நல்லவர் போன்று வலம் வரும் வஞ்சகர் சொல் கேட்டு  நியாயத்தை புறக்கணித்து நடந்து கொள்ளும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் வசந்தத்தை அனுபவிக்க முடியாமல் ங்கள் பக்க நியாயத்தை வலியுறுத்த முடியாததால்  மன வலியை அனுபவித்து வருகிறார்கள்.

சட்டங்கள் மனிதனின் பாதுகாப்புக்காக இயற்றப்படுகின்றன. மனிதனை பட்டினியிலிருந்து மீட்டிடவே மாநில, மத்திய அரசுகளால் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. உலகின் பல இயக்கங்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால் சட்டத்தை காரணம் காட்டி நியாயத்தை வஞ்சிக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

100 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டது  இந்திய அரசியல் சட்டம். ஆனால் நிர்வாகத்தின் தவறான முடிவுகளால் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

நமது தேசத்தந்தை கூட சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு காலக்கட்டத்தில் பொறுமை இழந்து செய் அல்லது செய்து மடி என்றார். மகாகவி பாரதி தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்.

அனைத்திலும் கொடியது வறுமை என்றார் ஒளவை. அதனால்தான் பசி, பட்டினியால் இளைஞர்கள் நக்ஸலைட்டுகளாக மாறிடாமல் தடுக்க அரசு பல திட்டங்களை தீட்டி அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் பட்டினிச் சாவுக்காக பல முறை மத்திய, மாநில அரசுகளை கண்டித்துள்ளது.

நீதி தாமதப்படுத்துவது நீதி மறுக்கப்படுவதாகும் என உச்ச நீதிமன்றம் கூறிவருகிறது.

இருந்தாலும் நீதிக்கு அநீதி இழைப்போரால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை பெருகிதான் வருகிறது. வழக்குகளில் 50 சதத்திற்கும் மேற்பட்டவை அரசுக்கு எதிரானவை என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

ஊழலை குறைக்கவும், தடுக்கவும் வெளிப்படையான நிர்வாகத்திற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனாலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கு தகவல் அளிக்காத அலுவலகங்கள் உள்ளன. தகவல்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக கேட்ட தகவல்களை அளிக்காமல் நிர்வாகத் தவறுகளை மூடி மறைக்கும் வகையில் குழப்பமான பதிலளிக்கவும், தவறான தகவல்களை அளிக்கவும் கூட அதிகாரிகள் சற்றும் தயங்குவதில்லை.

அனைத்து பிரச்சனைகளையும் முதலமைச்சர் அல்லது சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே நேரடியாக தீர்த்து வைக்க எக்காலத்திலும், எக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் முடியாது. அனால் அதிகாரிகளின் அதிகார வரம்புக்குட்பட்ட மிக சாதரணமான தீர்வுக்கு வாய்ப்புள்ளவைகளுக்கு கூட நேரடியாக முதலமைச்சர் அல்லது சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் கவனத்திற்கு பிரச்சனைகளை எடுத்து சென்றுதான் தீர்வு பெற வேண்டும் என்ற நிலையிருக்கிறது.

கீழ் நிலை அலுவலகம் முதல் துறை தலைமை வரை கண்டுகொள்ளாத நியாயமான பிரச்சனைகளை, நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்பையும் கூட புறக்கணித்து செயல்படுவோரின் செயல்பாடுகளை முதலமைச்சர் அல்லது சம்மந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயமான தீர்வு பெறுவதே இத்தளத்தின் முக்கிய நோக்கம்.

ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் ஓய்வூதியம் பெறாமல் போராடிக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள்.

அரசு விதிகளின்படி சத்துணவு திட்டம் போன்றவைகளில் விதவைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையளிக்காமல் மனசாட்சியின்றி அவர்களை புறக்கணித்து விதிகளை மீறி செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். உறுதியான ஆதாரங்கள் இருந்தும் நீதி பெற முடியாமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். இதனால் தற்கொலை முயற்சிகளில் இறங்குபவர்களும் இருப்பார்கள்.

இத்தளம் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களை, உரிய பரிசீலனைக்குப்பின் உண்மையிலேயே பாதிக்கப்பட்டதற்காக உறுதியான ஆதாரங்கள் இருப்பின் அத்தகைய ஆதாரங்களுடன்  வெளியிடும்.

இத்தளத்தை பார்வையிடும் அமைச்சர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த மனசாட்சியுள்ள  நியாயமான அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் அறிந்து அவர்களின் பிரச்சனைகள் தங்கள் துறை சம்மந்தப்பட்டதாக இருப்பின் அதனை தீர்த்து வைக்கலாம். இப்படி தீர்த்து வைக்கப்படும் பிரச்சனைகள் பிறருக்கு முன்னோடியாக விளங்க  இத்தளத்தில் வெளியிடப்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மொழியறிந்த பலரும், பல துறைகளை சார்ந்தவர்களும் இதன் வழி அறிந்து தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தர உதவலாம். இத்தளத்தில்  ஆவண ஆதாரங்களுடன் வெளியாகும் விண்ணப்பங்களைப்பற்ரி உங்கள் கருத்துக்களை ஆங்கிலம் அல்லது தமிழில் இத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாதிக்கப்பட்டோரின் பிரச்சனைகளை வெளியிடுவதால் இத்தளம் ஆளும் கட்சிக்கும், ஆளும் கட்சியை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் எதிரானது அல்ல. எதிர்கட்சிகளுக்கு ஆதரவானதும் அல்ல. எந்த கட்சியின் ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளின் பொறுப்பற்ற அல்லது பாரபட்சமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் பிரச்சனைகளின் வீரியம் தெரிந்து கொள்ளும் மந்திரக் கண்ணாடி கிடையாது. ஆகவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரிகளின் பொறுப்பற்ற அல்லது பாரபட்சமான நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவோர் இருக்கத்தான் செய்வார்கள்.

பல முயற்சிகளுக்குப் பின்னும் தீர்வு பெறாத பிரச்சனைகளை இத்தளத்தின் வாயிலாக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு பெற முயற்சிக்கவே இத்தளம். எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சில அதிகாரிகளின் பொறுப்பற்ற அல்லது பாரபட்சமான நடவடிக்கைகளால் பாதிக்கபடுவோர் இருக்கத்தான் செய்வார்கள். எனவே இத்தளத்தின் வெளியீடுகளை ஆளும் கட்சிக்கு எதிராக பயன்படுத்துவதை அரசியல் இயக்கங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பிரச்சனைகள் உருவானதற்கான மூலக்காரணம், பிரச்சனைகளின் தீர்வுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரச்சனைகளின் வீரியம், பிரச்சனைகள் சம்மந்தமான அரசு ஆணைகள், நீதிமன்ற தீர்ப்புகள, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரச்சனைகள் சம்மந்தமாக பெறப்படும் தகவல்கள் போன்ற பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, பிரச்சனைகளை அரசின் நேரடி கவனத்திற்கு எடுத்து சென்றுதான் தீர்வு பெற்றாக வேண்டும் என்ற முடிவு பெறும் பிரச்சனைகள் மட்டுமே இத்தளத்தில் வெளியிடப்படும்.

இத்தளத்தை முதலில் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தளத்தை பார்வையிடும் அறிஞர்கள், அனுபவசாலிகள், வல்லுனர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்ளையும் ஆராய்ந்து பரீட்சார்த்த செயல்பாட்டில் பெறும் அனுபவங்களையும் மதிப்பீடு செய்து இத்தளத்தை நிரந்தரமாக செயல்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும்.

பிரச்சனைகளின் தீவிரம் அறிந்து தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட / காணும் அதிகாரிகளைப்பற்றி இத்தளத்தில் வெளியிட விவரங்களை அனுப்புங்கள்.
      
            உலகம் அத்தகைய நல்ல
அதிகாரிகளை அடையாளம் காணட்டும்.

இத்தளம் உருவாக காரணமானவரின் 5 வருடங்களுக்கும் மேலாக, உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் உரிய தீர்வு பெறப்படாத பிரச்சனை மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்காகவும், உரிய நியாயமான தீர்வுக்காவும் முதல் விண்ணப்பமாக இத்தளம் மூலம் சமர்ப்பிக்கப்படுகிறது.

 
Copyright © 2008 Urvasanth.info.
All rights reserved worldwide.